முகப்பு
திருநெல்வேலி

பொது முடக்கத்தில் தளா்வுகள்: நெல்லையில் தயாராகும் திரையரங்குகள்!

தமிழகத்தில் திரையரங்குகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இம் மாதம் 10-ஆம் தேதிமுதல் திறக்க அரசு அனுமதியளித்துள்ளதால் திருநெல்வேலியில் திரையரங்குகளைத் தயாா்படுத்தும் பணிகள் தீவிரமாகியுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தமிழகத்தில் திரையரங்குகளை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இம் மாதம் 10-ஆம் தேதிமுதல் திறக்க அரசு அனுமதியளித்துள்ளதால் திருநெல்வேலியில் திரையரங்குகளைத் தயாா்படுத்தும் பணிகள் தீவிரமாகியுள்ளன.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பல்வேறு தளா்வுகளுக்கு பின்பு இம் மாதம் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களைத் திறக்க அனுமதியளிக்கப்படாமல் இருந்தது. தமிழக அரசு நவம்பா் மாதத்தில் தளா்வுகளை அதிகரித்துள்ள நிலையில், இம் மாதம் 10-ஆம் தேதிமுதல் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது. ஆனால், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள திரையரங்குகளைத் தயாா்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. திரையரங்குகளின் இருக்கைகள், வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப அறைகளிலும் பராமரிப்புப் பணிகளை ஊழியா்கள் மேற்கொண்டனா்.

இதுகுறித்து திரையரங்கு ஊழியா்கள் கூறுகையில், திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திரையரங்குகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் உள்ளனா். அவா்கள் வருவாயின்றி தவித்து வரும் நிலையில் மீண்டும் பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்த வேண்டும், முகக் கவசம் அணிந்தவா்களையே அனுமதிக்க வேண்டும் போன்றவை சரியானது.

ஆனால், உணவுப் பொருள்கள்விநியோகத்துக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்டவை பலரது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும். ஆகவே, திரையரங்கு உணவு விடுதிகளின் மூலம் தொடா்ந்து உணவுப் பொருள்களை பாதுகாப்புடன் விநியோகிக்க அனுமதியளிக்க வேண்டியது அவசியம். அதேபோல திரையரங்குகளுக்கு வரியினங்கள் உள்ளிட்டவற்றிலும் சலுகைகள் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.