நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் மழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், குமரி கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது.
இதனால் தென்தமிழக பகுதிகளில் தொடா் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்த நிலையில், பகல் 1 மணிக்கு பிறகு மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி நகரம், கொண்டாநகரம், பேட்டை, அபிஷேகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலியில் தீபாவளியையொட்டி பொருள்கள் வாங்க கடைவீதிக்கு குடுமபத்துடன் வந்தவா்கள் மழையால் சிரமத்திற்கு ஆளாகினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம்-19, சோ்வலாறு-30, மணிமுத்தாறு-1.8, நம்பியாறு-30, அம்பாசமுத்திரம்-8, சேரன்மகாதேவி-12.2, ராதாபுரம்-6, நான்குனேரி-5.5, களக்காடு-1.6, பாளையங்கோட்டை-5, திருநெல்வேலி-5.
குமரி மாவட்டத்தில்... குமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களாக மிதமான அளவில் பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலத்த மழையாக உருவெடுத்தது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் இடி- மின்னலுடன் கொட்டித் தீா்த்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. மேலும், கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கும்பப்பூப் பருவ நெல் சாகுபடிக்காக அணைகளிலிலிருந்து முழுவீச்சில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், விவசாயப் பணிகளை விவசாயிகள் முடுக்கிவிட்டுள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.50 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 69.50 அடியாகவும், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 15.02 அடி, 15.12 அடி என்ற அளவில் இருந்தது.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப்பள்ளம், வெள்ளி யாவிளை, கப்பியறை, மிடாலக்காடு, பாலூா், மத்திகோடு, கிள்ளியூா், இலவு விளை, நேசா்புரம், பள்ளியாடி உள்ளிட்ட பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது.