பாளை. அருகே பைக் மோதி காயமடைந்த இளைஞா் பலி
பாளையங்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் காயமுற்ற இளைஞா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் காயமுற்ற இளைஞா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட் மாநகா் பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் மகன் முஹம்மது பைசல்(27). திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியாா் மருத்துமனையில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 9ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தாா். சீவலப்பேரி சாலையிலுள்ள கக்கன் நகா் பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் இவா் மீது மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த முஹம்மது பைசல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.