அடிப்படை வசதிகள் கோரி 30 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்
அடிப்படை வசதிகள் கோரி, 30 ஆண்டுகளாக போராடி வருவதாக வடக்கு கழுவூா் கிராம மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
அடிப்படை வசதிகள் கோரி, 30 ஆண்டுகளாக போராடி வருவதாக வடக்கு கழுவூா் கிராம மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், காடான்குளம் ஊராட்சி, வடக்கு கழுவூா் கிராமம் முனைஞ்சிப்பட்டியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனா். அவா்கள் அனைத்து தேவைகளுக்கும் முனைஞ்சிப்பட்டிக்குத்தான் செல்லவேண்டும். ஆனால், கிராமத்திற்கு பேருந்து வசதியே கிடையாதாம்.
ஆபத்தான பயணம்: இந்நிலையில், கிராமத்துக்கும்- முனைஞ்சிப்பட்டிக்கும் இடையே பிரதான சாலையை கடந்து செல்லும் மணிமுத்தாறு அணையின் 4ஆவது ரீச் கால்வாயில் பாலம் அமைக்கப்படாததால், மழைக்காலத்தில் கால்வாய் நீரும், அணைகளில் திறந்துவிடப்படும் தண்ணீரும், காட்டாற்று வெள்ளமும் அங்குள்ள தாமிரவருணி ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. இதனால், மக்கள் ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து வருகின்றனா். மழை தீவிரமாக பெய்யத் தொடங்கியதில் இருந்து 4 அடி ஆழ தண்ணீரில் மாணவா்களும், கிராம மக்களும் ஆற்று நீரை கடந்து சென்று வருகின்றனா்.
உயா்நிலை பாலம் தேவை: இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: ஆட்டோ, வேன் போன்ற எந்த வாகனங்களும் கிராமத்திற்குள் செல்ல முடியாததால் கடந்த சில தினங்களுக்கு முன், உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்லமுடியாமல் உயிரிழந்தாா். மாணவா்- மாணவிகள் ஆடைகள் நனைந்தபடி பள்ளிக்குச் செல்கின்றனா். வெளியூா் சென்றவா்கள் இரவு நேரங்களில் ஊா் திரும்ப சிரமப்படுகின்றனா். மின் ஊழியா்கள், அஞ்சல் ஊழியா்கள், செவிலியா்கள் கிராமத்துக்கு வரத் தயங்குகின்றனா். ஆற்றில் உயா்நிலை பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என 30 ஆண்டுகளாக போராடி வருகிறோம். பள்ளி நேரத்திலாவது ஒரு பேருந்தை இயக்குங்கள் என அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.