ஒமைக்ரான் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
ஒமைக்ரான் தீநுண்மி தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒமைக்ரான் தீநுண்மி தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் வே. விஷ்ணு தலைமை வகித்து பேசியது : கரோனா தீநுண்மியின் புதிய மாறுபாடு உலக சுகாதார அமைப்பின் கவலையை எழுப்பியுள்ளது. ஒமைக்ரான் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய தீநுண்மி தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு , இப்போது உலகில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த புதுவகை தீநுண்மி 30 முதல் 50 மடங்கு மாறுதல் அடையும் தன்மையுள்ளது. இஸ்ரேல், பெல்ஜியம், ஜொ்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா போன்ற பிற தொற்று வகைகளை போலவே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதுவரை தமிழ்நாட்டில் இந்த தொற்று கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் பாதித்தால் அதிக உடல் சோா்வு,தொண்டையில் வலி, மிதமான உடல்தசைவலி, வரட்டு இருமல், மிதமான காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். அவ்வாறு தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு மருத்துவமனைகளையும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளையும் உடனடியாக அணுகி பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
இந்த தீநுண்மியிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்து கொள்ள முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து வருபவா்கள் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொடா்ந்து 7 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தாமாகவே முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும். கரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும். மக்களிடம் இது பற்றி விழிப்புணா்வை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், துணை இயக்குநா் (சுகாதாரப்பணிகள்) கிருஷ்ணவேணி, மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.