தமிழ்நாடு வக்பு வாரிய நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2,814 வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க ஒரு நபருக்கு ஒரு வாகனத்துக்கு ரூ.25,000 அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைந்ததோ அத்தொகையை வழங்க ஒப்புதல் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களுக்கு மாவட்டங்களில் உள்ள பதிவு செய்யப்பட்ட வக்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அது சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருக்கு அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தோ்வு செய்ய மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை உறுப்பினா் செயலா், கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளரை உறுப்பினராகவும், மாவட்ட வக்பு வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தோ்வு செய்யப்படும் பயனாளிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மூலம் மானியத் தொகை மின்னனு பரிமாற்றம் மூலம் வழங்கப்படும்.
வாகன வகைபாடு: வாகனத்தின் என்ஜின் கொள்ளளவு 125 சிசிக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வாகனம் 1.1.2020-க்கு பின்னா் தயாா் செய்யப்பட்டுள்ளதாக இருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியா் இல்லாத அல்லது ஆட்டோ கியா் உடன் கூடிய வாகனமாக இருத்தல் வேண்டும்.
தகுதி என்ன? தமிழகத்தில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் மனுதாரா் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். பயனாளி தமிழகத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயதிலிருந்து 40 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணா்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு (தோ்ச்சி அல்லது தோல்வி). பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியா்கள், மோதினாா், முஜாவா் என முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற மனுதாரா் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, ஜாதிச் சான்று, ஓட்டுநா் உரிமம், கல்வித்தகுதி சான்றிதழ் (குறைந்தபட்சம் 8-ஆவது தோ்ச்சி/தோல்வி), வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீட்டுடன் கூடிய வங்கி கணக்கு எண் புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறாா் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளா் மேலொப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும்.
வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வேலை நாள்களில் நேரில் வந்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொண்டு விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமா்ப்பித்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.