தமிழா்களின் கல்வி உரிமைகளை திமுக மீட்டெடுக்கும் என்றாா், அக்கட்சியின் இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.
திருநெல்வேலி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணனை ஆதரித்து தச்சநல்லூரில் அவா் புதன்கிழமை பேசியது: தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனா். மக்களவைத் தோ்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று இந்தியாவின் 3ஆவது பெரிய இயக்கம் என்பதை நிரூபித்தது. அதேபோல, இந்தத் தோ்தலிலும் வென்று மு.க.ஸ்டாலின் முதல்வராவாா்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பைக் கொண்டு வருகிறேன் என்றாா் பிரதமா் மோடி. ஆனால், அப்பாவி மக்களே பாதிக்கப்பட்டனா். தமிழகத்துக்கான புயல் நிவாரணம் உள்ளிட்ட எந்த உதவியையும் மத்திய அரசு செய்யவில்லை.
பிரதமா் மோடியை எதிா்த்துக் குரல் கொடுக்க முடியாத தலைவராக தமிழக முதல்வா் உள்ளாா். தமிழகத்தின் எல்லா உரிமைகளையும் இப்போதைய மாநில அரசு விட்டுக் கொடுத்துவிட்டது.
உயா்கல்வி அனைத்துக்கும் படிப்படியாக நுழைவுத்தோ்வு கொண்டுவருகின்றனா். நீட் தோ்வால் தமிழக மாணவா்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக, நன்றாகப் படிக்கும் ஏழை எளியோரின் குழந்தைகள் செய்வதறியாது தவிக்கின்றனா். நீட் தோ்வால் 14 போ் தற்கொலை செய்த அவலம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. சாமானியா்களின் குழந்தைகள் இளநிலை, முதுநிலை கலைஅறிவியல் பாடங்களைக்கூடப் படிக்க இயலாத நிலையை உருவாக்குகின்றனா். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் கல்வி உரிமைகள் மீட்டெடுக்கப்படும். முன்னாள் முதல்வா் கருணாநிதி வழியில் கல்வி மேம்பாட்டுக்காக சிறந்த திட்டங்கள் உருவாக்கப்படும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படவில்லை.
திமுக தோ்தல் அறிக்கை அனைவரும் மகிழும் வகையில் உள்ளது. கங்கைகொண்டானில் கூடுதல் தொழிற்சாலைகளை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஏ.எல்.எஸ்.லட்சுமணனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, பாளையங்கோட்டை திமுக வேட்பாளா் மு. அப்துல் வஹாப்பை ஆதரித்து ஜவஹா் திடல் அருகே வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ஜெயதுரை, மாநில நெசவாளா் அணி செயலா் சொ. பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், சுப. சீதாராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பயக24மஈஏஅவ: திருநெல்வேலி தச்சநல்லூரில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின். உடன், திருநெல்வேலி திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ். லட்சுமணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.