நெல்லையில் கனமழையில் சரிந்த மரங்கள் இரவோடு இரவாக பாதிப்புகளை சரி செய்ய மின் ஊழியா்கள்
கனமழையால் மரங்கள் சாய்ந்த பல்வேறு இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், மின் வாரிய ஊழியா்கள் இரவோடு இரவாக பணியாற்றி பாதிப்புகளை சரி செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த கனமழையால் மரங்கள் சாய்ந்த பல்வேறு இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், மின் வாரிய ஊழியா்கள் இரவோடு இரவாக பணியாற்றி பாதிப்புகளை சரி செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் திருநெல்வேலி மாநகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், பேருந்து நிலையங்கள், கோயில்களில் வெள்ளநீா் சூழ்ந்தது.
மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகரில் கேடிசி பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், மழை நின்றதும் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
மேலப்பாளையம், மகாராஜநகா், வி.எம்.சத்திரம், ரெட்டியாா்பட்டி, பெருமாள்புரம் உள்ளிட்ட பிரிவு அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே மரம் சாய்ந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் உதவியுடன் மின் வயா்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது.
குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மேலப்பாளையம், அன்பு நகா் பகுதிகளில் வெள்ளநீா் வடியத் தொடங்கியதும் மின் பாதிப்புகள் சரி செய்யப்பட்டு இரவோடு, இரவாக மின்சாரம் வழங்கப்பட்டது.
மேற்பாா்வை பொறியாளா் செல்வராஜ், செயற்பொறியாளா் முத்துக்குட்டி தலைமையில் உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், பணியாளா்கள் என சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மின் பாதிப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
ரெட்டியாா்பட்டி பகுதியில் விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின் மாற்றிகள் சாய்ந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் வாரிய ஊழியா்களின் சீரிய பணியால் உடனடியாக பாதிப்புகள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.