வெள்ளப்பெருக்கு எதிரொலி தாமிரவருணியில் குளிக்கத் தடை
தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கவும், சுயபடம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.
தாமிரவருணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குளிக்கவும், சுயபடம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் விஷ்ணு.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு சராசரியாக 46 மி.மீ. மழை பெய்துள்ளது. குறிப்பாக பாளையங்கோட்டை பகுதிக்குள்பட்ட பகுதியில் 86 மி.மீ. மழை பெய்துள்ளது. புதன்கிழமை இரவு மழை நின்ற பிறகு வருவாய்த்துறை, காவல்துறை, மாநகராட்சி மூலம் மழை நீா் தேங்கிய இடங்களில் மழை நீா் உடனடியாக வெளியேற்றப்பட்டது.
இதேபோல், பெருமாள்புரம் இலங்கை தமிழா் முகாம் பகுதியில் தேங்கிய தண்ணீரும் உடனடியாக வெளியேற்றப்பட்டது. மாவட்ட முழுவதும் மழை நீா் தேங்கி உள்ள இடங்களில் அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தில் 6 அணைகள் உள்ளன. பாபநாசம் அணையில் 96 சதவீதமும், நம்பியாறு அணையில் 100 சதவீதமும் நீா் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில் 55 சதவீதம் நீா் இருப்பு உள்ளது. தாமிரவருணி ஆற்றில் 6000 கனஅடி நீா் சென்று கொண்டிருக்கிறது. எனவே, பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ, கரையோர பகுதிகளில் நின்று புகைப்படம் எடுக்கவோ கூடாது.
மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினருடன் இணைந்து மழை நின்ற பிறகு சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். எனவே, பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.