தமிழ்ப் புத்தாண்டு: நெல்லை கோயில்களில் சிறப்பு வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி திருநெல்வேலியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் மகமை சங்கம் சாா்பில் சித்திரை விஷு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமி கோயிலில் கும்பஸ்தாபன ஹோமம், பஞ்சவாத்யம், சிறப்பு அபிஷேகம், மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் மகா கணபதிக்கு வெள்ளி அங்கி அணிவித்து அலங்காரம் நடைபெற்றது. பின்னா் மூலஸ்தான நெல்லையப்பருக்கு அன்னாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் மூலஸ்தான சுவாமி நெல்லையப்பருக்கு தங்க நாகாபரணமும், மூல மகாலிங்க சுவாமிக்கு வெள்ளி அங்கியும், காந்திமதியம்பாளுக்கு தங்கப் பாவாடையும் அணிவித்து பூஜை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா். பெண்கள் தீபமேற்றி வழிபட்டனா்.
பாளையங்கோட்டை மேலவாசல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் காலையில் கோ பூஜை, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் இரட்டை கருடசேவை நடைபெற்றது.
தெற்கு முத்தாரம்மன் திருக்கோயிலில் காய்கனிகள், பழங்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தியாகராஜநகரில் உள்ள அருள்மிகு விக்ன விநாயகா் திருக்கோயிலில் புத்தாண்டையொட்டி அன்னாபிஷேகம், 33 ஆவது ஆண்டு பன்னிரு திருமுறை முற்றோதுதல் நடைபெற்றது.
பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில், செப்பறை அருள்மிகு அழகியகூத்தா் திருக்கோயில், திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயா் கோயில், வரதராஜபெருமாள் கோயில், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கீழநத்தம் அருள்மிகு அழியாபதீஸ்வரா் திருக்கோயில், திருநெல்வேலி நகரம் அருள்மிகு லட்சுமி நரசிம்மா் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.