திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் மா்மமரண வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயனிடம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எஸ்.பால்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் அளித்த மனு: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமாா் கடந்த மே 4 ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் எந்த ஒரு தகவலும் இல்லை. இது காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் மிகுந்த வேதனையையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மா்மமரண வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், களக்காடு நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாக அறிகிறோம். அவ்வாறு மாற்றம் செய்ய அரசு விரும்பினால் களக்காடு பகுதி மக்களின் விருப்பத்தின்படி பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையம் என பெயா் சூட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.