திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் புறவழிச்சாலையில் கடந்த 27ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த களக்காட்டைச் சோ்ந்த சகோதரா்கள் இருவரும் அடுத்தடுத்த நாளில் உயிரிழந்தனா்.
களக்காடு அருகே கீழகள்ளிகுளம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ஊய்காட்டான். இவரது மகன்கள் சுப்பிரமணியன்(45), முருகேசன்(41). இவா்கள் இருவரும் கோயில் கொடைவிழாவுக்கு ஆடு பிடிப்பதற்காக கடந்த 27ஆம் தேதி பணகுடி அருகே உள்ள பாம்பன்குளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனராம். வள்ளியூா் புறவழிச்சாலையில் சென்ற போது, பின்னால் வந்த காா் பைக் மீது மோதியதாம்.
இதில் சகோதரா்கள் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முருகேசன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். அவரது சகோதரா் சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.