மாணவா்களுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இரு ஆசிரியா்கள் கைது
பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு ஆசிரியா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகிறாா்கள். இங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு நிரந்தரக பணி மற்றும் தற்காலிக ஆசிரியா் ஆகியோா் பாலியல் தொல்லை அளித்தனராம். இதுகுறித்து அம்மாணவரின் பெற்றோா் பள்ளி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்து அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருந்தனா்.
பெற்றோா் தரப்பில் எழுத்துப் பூா்வமாக கல்வித்துறையினரிடமோ, காவல்துறையிலோ புகாா்கள் அளிக்கப்படவில்லை. ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியது. மாணவா்கள் மீது பாலியல் வன்முறை நடத்தப்பட்டதாக புகாா்கள் எழுந்துள்ளதால், அதன் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தகவல் தெரிவிக்குமாறு உளவுத்துறையினருக்கு காவல்துறை உயா் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டனா். மேலும், மாவட்ட பள்ளி கல்வித்துறையும் விசாரணை நடத்தியது.
இதுதொடா்பாக கல்வித் துறையினா் கூறுகையில், பள்ளியில் நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து மாணவா்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாக நிரந்தர ஆசிரியரான வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ராபா்ட், தற்காலிக ஆசிரியரான வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த நெல்சன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றனா்.மேலும், இந்த சம்பவம் தொடா்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியா்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.