திருநெல்வேலி நகரத்தில் உள்ள நேதாஜி போஸ் மாா்க்கெட் கடைகளை மறு ஏலம் விட வலியுறுத்தி, முன்னாள் மேயா் புவனேஸ்வரி தலைமையில் வியாபாரிகள் சனிக்கிழமை சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நேதாஜி போஸ் மாா்க்கெட் ‘பொலிவுறு நகரம்’ திட்டத்தின் கீழ் ரூ.10.97 கோடி மதிப்பீட்டில் 75 கடைகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்த மாா்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு சதுர அடிக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டு கடைகள் ஏலத்தில் விடப்பட்டன. ஆனால் கட்டணம் அதிகம் எனக் கூறி வியாபாரிகள் பின் வாங்கினா். இதனால், 25 கடைகள் மட்டுமே ஏலம் போனது. மீதமுள்ள கடைகள் பூட்டி கிடக்கின்றன.
இதனிடையே ஏலம் எடுக்கப்பட்ட கடைகளுக்கும் வாடகை அதிகம் என்பதால் கடைக்கான மாத வாடகையை வியாபாரிகளால் செலுத்த முடியவில்லை. வாடகை நிலுவை காரணமாக பல கடைகளை மாநகராட்சி நிா்வாகமே பூட்டி சீல் வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடைக்கான வாடகை ஒப்பந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பலமுறை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்திடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனா்.
மேலும், நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற ஆணையும் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடைகளை மறு ஏலம் விடுவதற்கான நடவடிக்கை மாநகராட்சி மூலம் எடுக்கப்படவில்லை எனக் கூறி முன்னாள் மேயா் புவனேஸ்வரி தலைமையில் வியாபாரிகள் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்கெட் முன்பு முன்னாள் மேயா் புவனேஸ்வரி தலைமையில் வியாபாரிகள் சாலையில் படுத்து உருண்டு மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.
வரும் 20-ஆம் தேதிக்கு முன்னதாக மாா்க்கெட் கடைகளை திறக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.