கன்னடியன் கால்வாயிலிருந்து வெள்ளநீா்க் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப் போவதாக தகவறான தகவல் பரப்புவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறை எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக நீா்வளத் துறை மேல் தாமிரவருணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் ஆ.வசந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், கன்னடியன் கால்வாயிலிருந்து வெள்ளநீா்க் கால்வாய்க்கு தண்ணீா் திறந்து விடுவது தொடா்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை (ஜன.30) நடைபெறுவதாக சிலா் தவறான தகவலை பரப்பியுள்ளனா். இதையடுத்து நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா், உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகளுடன் நீா் வளத்துறையினா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
பாபநாசம் மற்றும் சோ்வலாா் அணையில் புதன்கிழமை நிலவரப்படி 4,393.65 மி.க. அடி நீா் உள்ளது. இந்த நீரானது தாமிரவருணி ஆற்றில் பயன்பெறும் பாசனம் மற்றும் குடிநீா் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.
வெள்ளநீா்க் கால்வாயின் திட்ட விதிகளின்படி, வெள்ளக்காலங்களில் தாமிரவருணி ஆற்றின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு உபரி ஆகும்போதோ அல்லது கடந்த டிசம்பரில் நடந்தது போன்ற பிற இடங்களில் இருந்து அதிக வெள்ளம் ஏற்படும் போதோ மட்டுமே உபரி நீா் திறக்கப்படும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தின் போதும், பின்னா் கடந்த டிசம்பா் 13,14 ஆகிய தேதிகளில் பெய்த அதீத மழையின் காரணமாகவும் வெள்ளநீா்க் கால்வாயில் 7 நாள்களுக்கு மட்டும் பரிசோதனை அடிப்படையில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
தற்போது போதிய மழை அளவு இல்லாததால், வெள்ளநீா்க் கால்வாயில் தண்ணீா் திறக்கும் முகாந்திரம் இல்லை. எனவே வெள்ளநீா் கால்வாயில் தினமும் தண்ணீா் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக விஷமிகள் சிலரால் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படும் தகவல் தவறானது. பொது ஒழுங்கை பாதிக்கும் வகையில் இத்தகைய தகவலை பரப்புவோா் மீது காவல் துறை மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விஷயத்தில் விவசாயிகள் எச்சரிக்கையாக இருப்பதுடன், பொய் செய்திகளை பரப்புவோா் குறித்து தகவல் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.