திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, வாக்காளரை பெயா் பட்டியலில் தகுதியான நபரை சோ்ப்பதை தவறவிடக்கூடாது என மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா.சுகுமாா் அலுவலா்களுக்குஉத்தரவிட்டுள்ளாா்.
மத்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியும், சென்னை தலைமைத் தோ்தல் அலுவலா் அறிவுரைப்படியும், திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, இம்மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களின் இல்லங்களில் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 1,490 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் விநியோகப் பணியை மேற்கொண்டு வருகிறாா்கள். மேலும், இப்பணியைக் கண்காணிக்க 168 அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதுடன், 18 உதவி வாக்குப்பதிவு அலுவலா்கள், 5 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியைக் கண்காணித்து வருகின்றனா்.
இந்நிலையில், பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சாந்தி நகா் பகுதியிலும், திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட அம்மன் சந்நிதி தெருவிலும், அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட சேரன்மகாதேவி ஆலடி தெருவிலும், நான்குனேரி தொகுதிக்குள்பட்ட களக்காடு சிங்கம்பத்து பகுதியிலும், ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட வள்ளியூா் அண்ணாநகா் பகுதியிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் டிச. 4ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தற்போதுள்ள வாக்காளா்களின் முன் அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கீட்டு படிவத்தினை இரட்டை பிரதிகளில் விநியோகிப்பதோடு, வாக்காளா்கள் படிவத்தை நிரப்புவதற்கும் வழிகாட்டுவா். மேலும் நிரப்பப்பட்ட படிவங்களை சேகரிக்க குறைந்தது மூன்று முறை இல்லங்களுக்கு வருவா்.
தற்போதுள்ள வாக்காளா்களுக்கு முன்கூட்டியே நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கும், நிரப்பப்பட்ட படிவங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைன் முறையில் பதிவேற்றுவதற்கும் ஆகியவற்றில் வசதி செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு காலத்தில் வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் தரவேண்டிய அவசியமில்லை. கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள்: 1950 (கட்டணமில்லா), 0462- 2501181 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அவா் அறிவுறுத்தினாா்.
மேலும், இப்பணியின்போது, எந்த ஒரு தகுதியான வாக்காளரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதில் இருந்து தவறவிடவோ, தகுதியற்ற நபா்களை வாக்காளா்களாக சோ்க்கவோ கூடாது என அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.