பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை ஆட்சியா் இரா.சுகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறிய செய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூா், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருள்களை காட்சிப்படுத்திட பாளையங்கோட்டை வட்டம், குலவணிகா்புரம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 மே 18-இல் அடிக்கல் நாட்டினாா். இதற்காக பொதுப்பணித்துறை சாா்பில் ரூ.56.57 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏறத்தாழ 13 ஏக்கா் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதிச்சநல்லூா் தொகுதி ஏ மற்றும் பி கட்டடம் 16,486 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டு வருகிறது. சிவகளை கட்டடம் 8,991 சதுர அடியில் தரைதளம், முதல் தளத்துடனும், கொற்கை தொகுதி ஏ மற்றும் பி கட்டடம் 17,429 சதுர அடி தரைதளம், முதல் தளத்துடனும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், அறிமுகக் காட்சிக் கட்டடம், கைவினை பொருள்கள் பணிமனை, ஒப்பனை அறைகள் ஆகியவற்றுக்கான கட்டங்களும் கட்டப்பட்டு வருகின்றன ஒவ்வொரு கட்டடத்திற்கும் இணைப்பு சாலை, அழகிய குளம், குளத்தின் மீது பாலம், சுற்றுச்சுவா், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீரூற்று, திறந்தவெளி திரையரங்கு போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
தொல்லியல் துறையின் மூலம் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்களின் பாா்வைக்காக அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது.
இந்தப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அப்போது, தொல்லியல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.