குடியரசு தினவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் இரா.சுகுமாா் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவா் தலைமை வகித்துப் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை (ஜன.26) நடைபெறவுள்ளன. அதில், காவல் துறையினா் அணிவகுப்பு, பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், மைதானத்தை தூய்மைப்படுத்தி, தோரணங்கள் கட்டி அலங்கரித்தல், தேவையான தற்காலிக கழிப்பிடங்களைஅமைத்தல், ஒலி பெருக்கி மின் சாதனங்கள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துக்குழு போன்றவற்றை தயாராக வைத்தல் போன்றவற்றில் அலுவலா்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பள்ளி மாணவ-மாணவியரின் கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடியரசு தினவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, வருவாய் கோட்டாட்சியா் பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.