தூத்துக்குடி

ஆட்கொணர்வு மூலம் தேடப்பட்ட குழந்தையின் உடல்:  ஆறுமுகனேரியில் புதைத்த இடத்தில் மீட்பு

DIN

ஆறுமுகனேரியில் குடும்பத் தகராறில் மனைவியை விட்டு பிரிந்து சென்ற கணவர், தன் குழந்தையை மீட்டுத்தர கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  ஆட்கொணர்வு மனுவை அடுத்து, ஆறுமுகனேரியில் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோண்டி  உடல் மீட்கப்பட்டது. 
ஆறுமுகனேரி பாரதிநகர் கோபால் மகன் வெங்கடசாமி (35). தற்போது கேரளத்தில் ஒரு கடையில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் பேயன்விளை புதூர் தேவசகாயம் மகள் சுமதிக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு சுமதி இரண்டாவதாக கர்ப்பமானார். அப்போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடசாமி தனது மனைவி சுமதியை விட்டு பிரிந்து சென்று விட்டார். 
இதற்கிடையே வெங்கடசாமி தனக்கு பிறந்த ஆண் குழந்தையை சுமதி விற்றுவிட்டதாகவும்,  குழந்தையை மீட்டுத் தருமாறும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு அளித்தார்.   இதுகுறித்து  விசாரிக்குமாறு திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அந்த மனு அனுப்பி வைக்கப்பட்டது.  இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.  விசாரணையில்,  குழந்தை பிறந்த 3 நாள்களில் இறந்து விட்டதாகவும்,  அதை ஆறுமுகனேரி பேயன்விளை புதூரில்  புதைத்துவிட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை சுமதியின் தந்தை தேவசகாயம்,  ஆறுமுகனேரி பேயன்விளை புதூரில்  குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். 
அங்கு ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்  சித்ரா, துணை வட்டாட்சியர் கோபால்,  ஆத்தூர் வருவாய் ஆய்வாளர் பொன்செல்வி,  காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன்,  ஆறுமுகனேரி காவல் ஆய்வாளர் பத்திரகாளி,  உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் தோண்டப்பட்டது.  அங்கு ஒரு குழந்தையின் எலும்புக்கூடு  மீட்கப்பட்டது.  போலீஸார் அதை சேகரித்து தடயவியல் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இச்சம்பவம் தொடர்பாக காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் தனசேகரன் ,ஆறுமுகனேரி போலீஸில் அளித்த புகாரின்பேரில்,  போலீஸார் வழக்குப் பதிந்து,  குழந்தை இயற்கையாக இறந்ததா அல்லது கொலை செய்யப்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT