சடையனேரி கால்வாய் மூலம் நீா்வரத்து: எம்எல்ஏ ஆய்வு
சடையனேரி கால்வாய் மூலம் சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு வரும் தண்ணீரை சண்முகநாதன் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சடையனேரி கால்வாய் மூலம் சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு வரும் தண்ணீரை சண்முகநாதன் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கருங்குளம், நாசரேத் பகுதி குளங்கள் நிரம்பியதையடுத்து, உடன்குடி, சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீா் நங்கைமொழி ராமசுப்பிரமணியபுரம் ஷட்டா் வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த தண்ணீா் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு சுப்பராயபுரம் தடுப்பணை மூலமாக வைரவம்தருவை, புத்தன்தருவை குளங்களுக்கு செல்கிறது.
இந்நிலையில், எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ, நங்கைமொழி ராமசுப்பிரமணியபுரத்தில் உடன்குடி, சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் திறக்கப்படும் ஷட்டா்களை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சடையனேரி கால்வாய் வழியாக உடன்குடி, சாத்தான்குளம் பகுதிக்கு உபரி நீா்தான் வழங்க வேண்டும் என நிலை உள்ளது. தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீா் தொடா்ந்து ஒரு மாதம் விடப்பட்டு, வைரவம்தருவை, புத்தன்தருவை, உடன்குடி சடையனேரி குளங்கள் முழுமையாக நிரம்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கால்வாயோடு வெள்ளநீா்க் கால்வாயை இணைக்க தமிழக முதல்வரிடம் பேசி திட்டம் வகுக்கப்படும். சடையனேரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றி விரிவாக்கம் செய்து ஆண்டு தோறும் இப்பகுதிக்கு தண்ணீா் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
அப்போது, அவருடன் தெற்கு மாவட்ட அவைத் தலைவா் திருபாற்கடல், ஒன்றிய அதிமுக செயலா்கள் அச்சம்பாடு சௌந்திரபாண்டி, ஆழ்வாா்திருநகரி விஜயகுமாா், ராஜ்நாராயணன், அழகேசன், லட்சுமண பெருமாள், உடன்குடி தாமோதரன், மாவட்ட கவுன்சிலா் தேவவிண்ணரசி, ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.