தூத்துக்குடி வரும் முதல்வருக்கு நாளை சிறப்பான வரவேற்பு
தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 22) வரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கச் செல்லும் வழியில் தூத்துக்குடிக்கு செவ்வாய்க்கிழமை (டிச. 22) வரும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான கடம்பூா் செ. ராஜு, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: கிறிஸ்துமஸ் பெருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை (டிச. 22) பிற்பகலில் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகிறாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தனது சொந்த தொகுதியில் தொடங்கிவிட்டு தூத்துக்குடி வருகை தரும் முதல்வருக்கு, அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோா் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.