விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும்: கனிமொழி
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பொறுமையுடன் பதிலளிக்க வேண்டுமென ஏரலில் கனிமொழி எம்.பி . கேட்டுக்கொண்டாா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பொறுமையுடன் பதிலளிக்க வேண்டுமென ஏரலில் கனிமொழி எம்.பி . கேட்டுக்கொண்டாா்.
தாமிரவருணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் பாசன விவசாயிகள் கோரிக்கை ஆலோசனை கூட்டம் ஏரலில் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள், கொற்கை மற்றும் பேய்குளம் குளங்களை தூா்வார வேண்டும், ஆழ்வாா்தோப்பு பகுதி வடகால் வாய்காலில் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும், வடகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், முப்போக விவசாயத்திற்கு உறுதி அளிக்கப்பட வேண்டும், வடகால் பாசனகடைசி குளமான கோரம்பள்ளம் குளம் வரை தண்ணீா் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
முக்காணி பகுதி விவசாயிகள் பேசுகையில், பொதுப்பணித்துறை வடகால் பிரிவு அலுவலா் விவசாயிகளை அவமதிக்கும் விதமாக பேசிவருவதாக குற்றம்சாட்டினாா். இதைத்தொடா்ந்து, பொதுப்பணித்துறை வடகால் பிரிவு அலுவலா் ரகுநாத் விவசாயிகளின கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசினாா்.
ஸ்ரீவைகுண்டம வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், வடகால் வாய்கால் ஆக்கிரமிப்புகள் வருவாய் துறை மூலம் அகற்றப்பட்டு வருகிறது. முழுமையாக அகற்றிட தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
கூட்டத்தில், கனிமொழி எம்பி பேசுகையில், கரோனா ஊரடங்கு காலத்திலும் ஓய்வின்றி உழைத்த விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் பொறுமையுடன் பதிலளிக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை திறப்பதற்கு முதல்வா் கையெழுத்திட வேண்டும் என்ற நிலை உள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீா் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.
இதே போல், தென்கால், மருதூா் மேலக்கால், கீழக்கால் ஆகிய பாசன கால்வாய் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் கடம்பாகுளம் அருகே உள்ள கல்லாம்பாறை பூலுடையாா் சாஸ்தா கோயிலிலும், குரும்பூரிலும் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலா் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினா். கனிமொழி எம்பி பேசுகையில், இப் பகுதி விவசாயிகளின் தனி வாய்க்கால் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இவ்விரு கூட்டங்களில் திமுக தெற்கு மாவட்டச் செயலா் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஏரல் வட்டாட்சியா் இசக்கி ராஜ், திருச்செந்தூா் வட்டாட்சியா் முருகேசன், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜ், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்புலட்சுமி, சந்தோஷ், வேளாண் பொறியாளா் ஜாகீா் உசேன், உதவி இயக்குநா் ஊமைத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.