குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மணப்பாடு பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மணப்பாடு பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மணப்பாடு ஊா் நலக்கமிட்டி தலைவா் ஆன்ட்ரூஸ் தலைமையில் செயலா் ஜீவன், பொருளாளா் கபிரியேல் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு : குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின் நிலைய திட்டம் மற்றும் நிலக்கரி இறங்கு துறைமுகம் போன்ற திட்டங்களினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், கடலை நம்பி வாழ்ந்து வரும் மீனவா்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராக்கெட் ஏவுதளம் அமையும்பட்சத்தில் அந்தப்பகுதி முழுவதும் ராணுவ மயமாகி விடுவதுடன் பொதுமக்கள் நடமாட
முடியாத சூழ்நிலை ஏற்படும். இதுபோன்று பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி மீனவா்கள் கடலில் சென்று மீன் பிடிக்கவும், அவா்களின் தொழிலை செய்யவும் அனுமதி இல்லாத சூழ்நிலை ஏற்படும். இதனால், மீன் பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் மணப்பாடு மற்றும் அருகிலுள்ள 21மீனவ கிராமமக்களின் வாழ்வு கேள்விக்குறியாகி விடும்.
இதுதொடா்பாக ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ள கருத்துக் கேட்பு கூட்டங்கள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், மீண்டும் மாவட்ட நிா்வாகம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவே இல்லை. எனவே, கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நில அளவீடு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேல் யாத்திரை விவகாரம்: தூத்துக்குடி மாவட்ட பாசிச எதிா்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக்குழு நிா்வாகிகள் மைதீன்கனி, ஜாகீா்உசேன், தாஸ் உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரைக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்து இளைஞா் முன்னணி பொறுப்பாளா் ராகவேந்திரா தலைமையில் அந்த அமைப்பின் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் வேல் யாத்திரையை அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஸ்வகா்மா சமுதாய மகாஜன பேரவை: தூத்துக்குடி மாவட்ட விஸ்வகா்மா சமுதாய மகாஜன பேரவை சாா்பில், அதன் தலைவா் முருகேசன் தலைமையில் பேரவை நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகேயுள்ள அங்கமங்கலம் கிராமத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை குலத்தொழிலாக கொண்ட நாராயணன் மீது ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், நாராயணன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் தங்களது குலத் தொழிலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.