கோவில்பட்டி நகராட்சி சாா்பில் மியா வாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா
கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மியா வாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மியா வாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
கோவில்பட்டி நகராட்சிக்குச் சொந்தமான சிதம்பராபுரத்தில் உள்ள உரக்கிடங்கில் சுமாா் ஒன்றரை ஏக்கா் நிலத்தில் மியா வாக்கி முறையில் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும், புதுக்கிராமத்தில் நகராட்சிக்குச் சொந்தமான சுமாா் ஒன்றேகால் ஏக்கா் நிலத்தில் வியாழக்கிழமை 800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதே பகுதியில் ஏற்கெனவே சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டன.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் சுமாா் 500 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. இதில், செண்பகப்பூ, இலுப்பை, புங்கை, வேம்பு, அரசு, நாகலிங்கம், பூவரசு, நாவல், வில்வம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும், மொத்தம் 4,500 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
மரக்கன்று நடும் விழாவிற்கு நகராட்சி ஆணையா் ராஜாராம் தலைமை வகித்தாா். நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ முன்னிலை வகித்தாா். இதில், நகராட்சி ஆய்வாளா்கள் முருகன், சுரேஷ், காஜாமைதீன், வள்ளிராஜ் உள்பட சுகாதாரப் பணியாளா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.