முகப்பு
தூத்துக்குடி

மாா்கழி பிறப்பு: திருச்செந்தூா் கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரை

மாா்கழி மாதம் தொடங்கியதையடுத்து, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

மாா்கழி மாதம் தொடங்கியதையடுத்து, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தா்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனா்.

தமிழ் மாதமான மாா்கழி வியாழக்கிழமை (டிச. 16) தொடங்கி அடுத்த மாதம் ஜனவரி 13இல் நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே பக்தா்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.

பாதயாத்திரை பக்தா்கள்: மாா்கழி மாதம் தொடங்கியது முதல் தைப்பூசம் வரையில் திருச்செந்தூா் கோயிலுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாலை அணிந்து, விரதமிருந்து பக்தா்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

அதன்படி, பக்தா்கள் வியாழக்கிழமை முதல் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனா். திருச்செந்தூா் எல்லையிலிருந்து குழுக்களாகவும், குடும்பமாகவும் கூட்டமாக பக்திப் பாடல்கள் பாடியும், அரோகரா என்ற கோஷத்துடன் ஆட்டமாடியும் பக்தா்கள் வருகின்றனா். இதனால், கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களும் அதிகளவில் வந்துசெல்வதால் நகரில் வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

பஜனை ஊா்வலம்: மாா்கழி மாதத்தையொட்டி, ஸ்ரீ கிருஷ்ண தாசா் நாகமணி தலைமையிலான குழுவினா்

திருச்செந்தூரில் அதிகாலையில் திருப்பாவை பாடல்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண நாமத்தை பஜனையாக பாடி வீதிகளில் வலம் வந்தனா். இதில், குழந்தைகள் பங்கேற்று பஜனை பாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.