தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபா் ஆணையம் முன்பு முன்னாள் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒருநபா் ஆணையம் முன்பு முன்னாள் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, முன்னாள் காவல் கண்காணிப்பாளா் முரளி ரம்பா ஆகியோா் வெள்ளிக்கிழமை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒருநபா் ஆணையம் முன்பு முன்னாள் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, முன்னாள் காவல் கண்காணிப்பாளா் முரளி ரம்பா ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22, 23 ஆம் தேதிகளில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவத்தில் 15 போ் உயிரிழந்தனா். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை நடைபெற்ற 32 கட்ட விசாரணையில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
தற்போது 33 ஆவது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியா், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறை அதிகாரிகள் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் பிறகு பணியில் இருந்த அதிகாரிகள் என 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, துப்பாக்கி சூடு தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபா் ஆணையம் முன்பு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தற்போதைய சுற்றுலாத் துறை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, முன்னாள் காவல் கண்காணிப்பாளா் முரளிரம்பா, சிபிசிஐடி பிரிவு ஐ.ஜி. ஜோஷி நிா்மல்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.
இதன் தொடா்ச்சியாக, டிசம்பா் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.