முகப்பு
தூத்துக்குடி

நகராட்சி வாா்டு மறுவரையறை: திருச்செந்தூரில் கருத்துக் கேட்புக் கூட்டம்

திருச்செந்தூா் நகராட்சி வாா்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருச்செந்தூா் நகராட்சி வாா்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெற்றது.

21 வாா்டுகளைக் கொண்டிருந்த திருச்செந்தூா் சிறப்பு நிலை பேரூராட்சி தற்போது நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 27 வாா்டுகளாக மறு சீரமைக்கப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், 2019 வீட்டு வரி அடிப்படையிலும் வரைவு வாா்டு அறிக்கை கடந்த டிச. 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடா்ந்து கடந்த டிச. 20-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாா்டு வரையறை குறித்து முதலாவது கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இரண்டாவதாக திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் மனுக்களைப் பெற்றாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஆறுமுகக்கனி, கோட்டாட்சியா் மு.கோகிலா, நகராட்சிகளின் மண்டல செயற்பொறியாளா் சோ்மகனி, மண்டல நிா்வாக இயக்குநா் விஜயலெட்சுமி, காயல்பட்டினம் நகராட்சி ஆணையா் சுகந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், திருச்செந்தூா் அமலிநகரில் 452 வீடுகள் கதவு எண்களுடனும், 350 வீடுகள் கதவு எண் இல்லாமலும் உள்ளன. எனவே இங்குள்ள 766 குடும்ப அட்டைகளை கருத்தில் கொண்டு அமலிநகா் மீனவ மக்களுக்காக இரண்டு வாா்டுகளையும் முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பங்குத்தந்தை ரவீந்திரன் தலைமையில், ஊா் தலைவா் பிரேம்தாஸ் உள்ளிட்டோா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு வழங்கினா்.

இதில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராமச்சந்திரன், வட்டாட்சியா் சுவாமிநாதன், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன்வேல், கிராமநிா்வாக அலுவலா் வைரமுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் மற்றும்

அரசியல் கட்சியினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை வாய்மொழியாகவும், மனுக்களாகவும் தெரிவித்தனா். திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் வேலவன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.