முகப்பு
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும்: மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் வாபஸ் பெறப்படும் என்று கோவில்பட்டியில் நடந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும்: மு.க.ஸ்டாலின்
பகிர்:

ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் போது போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் வாபஸ் பெறப்படும் என்று கோவில்பட்டியில் நடந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திட்டங்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு புகார் மனுக்களை வழங்கினர்.

தொடர்ந்து மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் சிலவற்றினை தேர்ந்தெடுத்து அந்த மக்களிடமே குறைகளைக் கூற அழைத்தார்.

அதில், கோவில்பட்டி சட்டப்பேரவைக்கு உள்பட்ட கயத்தாறு ஒன்றியம், இலந்தைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி மகள் பார்வதி, தூத்துக்குடி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பாக்கியராஜ் மகன் மெரினாபிரபு, தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர் ராபர்ட்வில்வராயர், தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் வான்மதி, ராமலட்சுமி,  கோவில்பட்டி மந்தித்தோப்பைச் சேர்ந்த அய்யப்பன், மாற்றுத்திறனாளி அறக்கட்டளையைச் சேர்ந்த வெங்கடேசன், பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பிரேமா ஆகியோர் தங்கள் கோரிக்கைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறினர்.

அதற்கு பதிலளித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது திமுக. திமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் 100 நாள்கள் போராடிய மக்கள் 2018, மே 22ல் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மனு வழங்க பேரணியாக வந்தனர். பேரணியை கலைக்க வேண்டும், கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் சென்னை கோட்டையில் இருந்து அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டனர்.

அதனால் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுத் தள்ளினர். அது ஒரு கருப்பு நாள். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து முதல்வர், பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நேரில் வந்து பார்க்கவும் இல்லை. திமுக ஆட்சிக்கு வரப் போகிறது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள், ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே வாபஸ் வாங்குவோம். உடனடியாக ரத்து செய்வோம்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மீனவர்கள், உப்பளத் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். ஊனமுற்றவர்களை, மாற்றுத்திறனாளிகள் என பெயரை சூட்டி அழகு பார்த்தவர் கருணாநிதி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

மகளிர் சுய உதவிக்குழுக்களை கருணாநிதி தொடங்கினார். பெண்கள் தன்னம்பிக்கை பெற்றவர்களாக, சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தான் இக்குழுக்கள் தொடங்கப்பட்டது. நான் துணை முதல்வராக இருந்த போது ஒவ்வொரு மாவட்டத்துக்கு போகும் போது மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் இருந்தாலும், அவர்களுக்கு சுழல் நிதி வழங்கிவிட்டு தான் செல்வேன்.

ஆனால் இன்று இருக்கக் கூடிய ஆட்சி, மகளிர் சுய உதவிக்குழுக்களை பற்றி கவலைப்படவில்லை. கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் செ.ராஜூ 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். கோவில்பட்டியில் உள்ள பிரச்னைக்கு முழுமையாக தீர்வு கண்டுள்ளாரா? சாலை வசதி, அணுகுசாலை வசதி, சுரங்கப்பாதையில் ஏற்பட்டுள்ள விரிசல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் கோரிக்கைகள் உள்ளது.

தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அந்த மனுக்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைத்து, ஆட்சிக்கு வந்து 100 நாளில் தங்கள் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.