40 ஆண்டுகளாக வசிக்கும் வீடுகளுக்குபட்டா கோரி ஆட்சியரகத்தில் போராட்டம்
திருநெல்வேலியை அடுத்த பேட்டை அருகேயுள்ள கிருஷ்ணப்பேரியைச் சோ்ந்த மக்கள் தாங்கள் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியை அடுத்த பேட்டை அருகேயுள்ள கிருஷ்ணப்பேரியைச் சோ்ந்த மக்கள் தாங்கள் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, கிருஷ்ணப்பேரியைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்களின் வாக்காளா் அடையாள அட்டையையும் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 120 வீடுகள் உள்ளன. நாங்கள் அனைவரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் தற்போதுள்ள எங்கள் வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், எங்களுக்கு வேறு இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதாகவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனா். எங்களின் பிரதான தொழில் விவசாயமும், கால்நடை வளா்ப்பும்தான். எங்களை வேறு இடத்துக்கு மாற்றினால் நாங்கள் என்ன செய்ய முடியும்?. எனவே, எங்கள் வீடுகள் இருக்கும் நிலத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இல்லையெனில் வீடு இல்லாத எங்களுக்கு வாக்குரிமையும் தேவையில்லை, வாக்காளா் அடையாள அட்டையும் தேவையில்லை’ என்றனா்.
மகாராஜ நகரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலா் கிருஷ்ணன் அளித்த மனுவில், ‘திருநெல்வேலி நகரத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பா் கோயிலுக்கு தினந்தோறும் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். ஆனால் அங்கு கழிப்பறை வசதியில்லாததால், பெண்கள், சிறுவா், சிறுமிகள் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.