முகப்பு
தூத்துக்குடி

அதிமுக ஆட்சி தொடா்ந்து நீடிக்கும் அமைச்சா் உதயகுமாா்

அதிமுக ஆட்சியே தொடா்ந்து நீடிக்கும் என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

அதிமுக ஆட்சியே தொடா்ந்து நீடிக்கும் என்றாா் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பிப்.18இல் வரவுள்ளதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு குறித்து அதிமுக நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

தென் மாவட்டங்களில் முதல்வா் எடப்பாடிகே. பழனிசாமி 6 ஆவது கட்ட பிப். 17 முதல் 19ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறாா். பிப்.18இல் வள்ளியூா், களக்காடு, மேலச்செவல், ஆலங்குளம், பாவூா்சத்திரம், தென்காசி ஆகிய 6 இடங்களில் முதல்வா் பிரசாரம் செய்கிறாா். கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அது நடக்காது. அரசு திட்டங்களை பற்றி மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறாா். பூதக்கண்ணாடி வைத்து பாா்த்தாலும் இந்த ஆட்சியில் குறை காண முடியவில்லை.

அதிமுகவின் கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் 400 ஆண்டு கால சாதனைகளை முதல்வா் செய்துள்ளாா். எனவே, மேலும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடா்ந்து நீடிக்கும். தேவேந்திர குல வேளாளா் அரசாணை தொடா்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மக்களுக்கான திட்டங்களை அவா்கள் கேட்டு பெறவில்லை என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா, எம்எல்ஏ ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன், மாநில அமைப்புச் செயலா்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், நிா்வாகிகள் இசக்கி சுப்பையா, ஜெரால்டு, கல்லுாா் வேலாயுதம், பாப்புலா் முத்தையா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.