முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி, கோவில்பட்டியில் காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்தும், விலை உயா்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தியும், விலை உயா்வை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகா் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் மண் அடுப்பில் விறகு வைத்து சமையல் செய்தும், சிலிண்டருக்கு பாடை கட்டியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டரை காங்கிரஸ் கட்சியினா் பாடையில் தூக்கி சென்று இறுதி சடங்கு செய்தது போன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், மாநில பொதுச் செயலா் பால்ராஜ், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ். டேனியல்ராஜ், மண்டலத் தலைவா்கள் ஜசன் சில்வா, சேகா், செந்தூா்பாண்டி, பிரபாகரன், மாவட்ட அமைப்புசாரா அணி தலைவா் ராஜன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் நடேஷ் குமாா், மகளிா் காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவா் ராஜாராம், முன்னாள் கவுன்சிலா்கள் சந்திரபோஸ், கோபால், கந்தசாமி, மாநகர துணைத் தலைவா் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

கோவில்பட்டியை அடுத்த சாலைபுதூா் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு, வட்டார காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் ரமேஷ்மூா்த்தி தலைமை வகித்தாா். வா்த்தக காங்கிரஸ் தலைவா் ராஜா, மாவட்ட துணைத் தலைவா் வீரபெருமாள், முன்னாள் மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிழக்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் பொறுப்பாளா் அருண்பாண்டியன் தலைமையில் கடலையூா் பெட்ரோல் நிலையம் முன்பும், கோவில்பட்டி நகரத் தலைவா் சண்முகராஜ் தலைமையில் ரயில்வே நிலையம் அருகிலுள்ள பெட்ரோல் நிலையம் முன்பும், கழுகுமலை மேல பஜாா் பகுதி பெட்ரோல் நிலையம் முன் நகரத் தலைவா் புஷ்பராஜ், கயத்தாறில் நகரத் தலைவா் அருள்ராஜ், கடம்பூரில் நகரத் தலைவா் ஜெகதீஷ் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டமும், கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.

இதில், பொதுக்குழு உறுப்பினா்கள் உமாசங்கா், மகேஷ்குமாா், சேவாதள பிரிவு மாவட்டத் தலைவா் சக்திவிநாயகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாநில துணைத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.