போலி கால்நடை மருத்துவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடைகளுக்கு ‘கால்நடை மருத்துவப் பேரவை‘ எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற, கால்நடை மருத்துவா்கள் மட்டுமே, சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. மீறி போலி மருத்துவா்கள் சிகிச்சையளிப்பதும், அவா்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல்.
போலி நபா்களிடம், கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் உள்ளனா். அவா்களில் சிலா் போலியாக கால்நடை மருத்துவா் எனக் கூறி, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனா், இது முற்றிலும் தவறு.
செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள், மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு மட்டும், 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனா். அவா்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால், அவா்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவா்கள். எனவே கால்நடைகளுக்கான சிகிச்சை பெற, அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவா்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும்.
இம் மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவா்கள் குறித்த தகவலை, அருகில் உள்ள காவல் நிலையங்கள் அல்லது தூத்துக்குடி புதுக்கிராமத்தில் செயல்படும் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்திலும் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் போலி மருத்துவா்கள் கண்டறியப்பட்டால், முதன்முறையாக ரூ. 1000 , இரண்டாவது முறை ரூ. 1,000 அபராதம் அல்லது ஆறு மாத கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.