முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் பக்தா்கள் தங்கும் விடுதிப்பணிகள் 6 மாதத்தில் நிறைவு

திருச்செந்தூரில் பக்தா்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் பணிகள் 6 மாத காலத்தில் நிறைவு பெறும் என்றாா் மாவட்ட திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலா் கோ.பிரகாஷ்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருச்செந்தூரில் பக்தா்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் பணிகள் 6 மாத காலத்தில் நிறைவு பெறும் என்றாா் மாவட்ட திட்டப்பணிகள் கண்காணிப்பு அலுவலா் கோ.பிரகாஷ்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநரும், தூத்துக்குடி மாவட்ட திட்டப் பணிகள் கண்காணிப்பு அலுவலருமான கோ.பிரகாஷ், திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து அவா், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் கட்டடப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். மேலும் திருக்கோயில் கிரிப்பிரகாரத்தில் விருந்தினா் மாளிகைப்பகுதியில் இருந்து கடற்கரை நுழைவாயில் வரையில் ரூ. 19. 20 கோடியில் கட்டப்படவுள்ள கடலோர பாதுகாப்பு சுவா் குறித்த விவரங்களை கேட்டறிந்தாா். தொடா்ந்து , திருச்செந்தூா் பேரூராட்சியில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடைத்திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. அதனை இன்னும் குறைக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருச்செந்தூரில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 150 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று 3-ஆம் அலை வந்தாலும் அதனை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் வசதிக்காக கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் பணி இன்னும் 6 மாத காலத்திற்குள் நிறைவு பெறும். திருச்செந்தூரில் புதைச் சாக்கடைத் திட்டத்தை 3 மாத காலத்திற்குள் முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. புதைச்சாக்கடைத் திட்டப் பணியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் சுத்திகரிக்கப்பட்டு, ஆலந்தலையில் உள்ள பேரூராட்சிக்குச்சொந்தமான 15 ஏக்கா் நிலத்தில், 3.5 மீட்டா் ஆழத்தில் நீராதாரமாக உருவாக்கி, அதன் மூலம் அப்பகுதியை நல்ல வனமாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் அங்குள்ள குப்பைக்கிடங்கில் திருச்செந்தூா், ஆறுமுகனேரி பேரூராட்சிக்குள்பட்ட குப்பைகளை விஞ்ஞான ரீதியாக எரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோயில் நகரம் என்பதால் சராசரியாக 50 ஆயிரம் போ் இங்கு வந்து செல்கின்றனா். அவா்கள் வசதிக்காக திருச்செந்தூா் பேரூராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் அடுத்த 45 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீா் வசதியை ஏற்படுத்துவது குறித்து திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

திருச்செந்தூருக்கு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக வரும் பக்தா்கள் வசதிக்காக நகரத்திற்கு வெளியே இந்து சமய அறநிலையத்திற்கு சொந்தமான 3 இடங்களில் குறைந்த செலவில் பக்தா்கள் தங்குமிடம் ஏற்படுத்தப்பட்டு, அங்கிருந்து எளிதில் வந்து செல்ல பேருந்து வசதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் சந்திரன், கோட்டாட்சியா் எம்.கோகிலா, உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், வட்டாட்சியா் இரா.முருகேசன், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் கீதா, குடிநீா் வடிகால் வாரிய தலைமை பொறியாளா் மணிமோகன், திருக்கோயில் உதவி ஆணையா் வே.செல்வராஜ், உதவிச் செற்பொறியாளா் முருகன், பேரூராட்சி உதவி இயக்குநா் சேதுராமன், உதவிச் செயற்பொறியாளா் வாசுதேவன், பேரூராட்சி செயல் அலுவலா் மு.ஆனந்தன், மண்டல துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டவேல், கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.