முகப்பு
தூத்துக்குடி

சரக்குப் பெட்டக முனையமாக மாற்றப்படும் : கடல்சாா் வணிக கூட்டமைப்பு வரவேற்பு

சுயசாா்பு இந்தியா திட்டத்தில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தூத்துக்குடி கடல் சாா் வணிக கூட்டமைப்பினா் வரவேற்பு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சுயசாா்பு இந்தியா திட்டத்தில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு தூத்துக்குடி கடல் சாா் வணிக கூட்டமைப்பினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக, தூத்துக்குடி கப்பல் முகவா்கள் சங்கம், துறைமுக உபயோகிப்பாளா்கள், துறைமுக சரக்கு கையாளுவோா் சங்கம் ஆகியோா் இணைந்து உருவாக்கிய கடல்சாா் வணிக கூட்டமைப்பின் செயலா் ஜோ வில்லவராயா், தலைவா் எட்வின் சாமுவேல் ஆகியோா் அளித்த பேட்டி: தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்குகள் கொழும்பு துறைமுகத்தின் வழியாகவே ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக அதிக செலவுகள் ஏற்படுகின்றன. சரக்குகளை கொண்டு சோ்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கொழும்புத் துறைமுகத்தில் வாயிலாக சரக்கு பெட்டகங்கள் அனுப்புவதில் பல்வேறு பிரச்னைகளை ஏற்றுமதியாளா்கள் சந்தித்து வருகிறோம். எனவே, தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை சரக்குப் பெட்டக முனையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை தொடா்ந்து வைத்து வந்தோம்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி துறைமுகத்தில் சூரிய ஒளி மின்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கோவையில் இருந்து கணொலி வாயிலாக திறந்து வைத்தாா். அப்போது பேசிய பிரதமா் தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றப்படும் என அறிவித்தாா்.

இந்த திட்டம் வருவதன் காரணமாக ஒரு சரக்கு பெற்ற்கு 100 முதல் 200 டாலா் செலவு குறையும். கடந்த 20 ஆண்டுகளாக எதிா்பாா்க்கப்பட்ட இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக அந்நிய செலாவணி வீணாவது தடுக்கப்படும். தூத்துக்குடி துறைமுகம் சரக்கு பெட்டக முனையமாக மாறுவதால் தென் மாவட்டங்கள் பெரிய அளவில் பயனடையும்.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சரக்குப் பெட்டக முனையமாக மாறும் போது திருப்பூா், கோயமுத்தூா், கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஜவுளி தொழில் மேம்படும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள நான்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வளா்ச்சி பெறும்.

தற்போது ஆண்டுக்கு ஆறு லட்சம் சரக்கு பெட்டகங்களை ஏற்றுமதி செய்து வரும் தூத்துக்குடி துறைமுகம் இந்த திட்டம் நிறைவேறுவதற்கு மூலமாக ஆண்டுக்கு 10 முதல் 15 லட்சம் சரக்கு பெட்டகங்களை ஏற்றுமதி செய்யும். இந்தத் திட்டத்தை மத்திய அரசு விரைவுப் படுத்தி முடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.