திருச்செந்தூரில் சாலைப் பணியைவிரைந்து முடிக்க கோரிக்கை
திருச்செந்தூா் ரதவீதியில் சாலையமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் ரதவீதியில் சாலையமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட தெற்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி மற்றும் உள்தெருக்களை சீரமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே ரூ. 2.70 கோடி நிதி ஓதுக்கப்பட்டு, சிமென்ட் சாலையமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. புதைச் சாக்கடைத் திட்டப் பணியனால் கிடப்பில் போடப்பட்ட பணி, பின்னா் தொடங்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு ரதவீதியில் புதிய சாலையமைக்கப்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக கிழக்கு ரத வீதி சாலையானது முழுவதும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளால் வடக்கு ரதவீதி தொடக்கப் பகுதியான இரும்பு வளைவு முதல் அமலிநகா் சந்திப்பு வரையில் இரு புறமும் சாலை அடைக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு ரதவீதி சாலைப் பணியால் அமலிநகா் சந்திப்பிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
திருச்செந்தூா் வடக்கு மற்றும் கிழக்கு ரதவீதிகளில் அதிகளவிலான வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது பொதுமுடக்க கட்டுப்பாடுகளால் வாகனப்போக்குவரத்து மட்டுமன்றி, வணிகமும் போதிய அளவில் இல்லை. இதனால் சாலைகள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த தருணத்தைப் பயன்படுத்தி இவ்விரு ரதவீதிகளில்நடைபெற்று வரும் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.