தூத்துக்குடியில் ஆசிரியரிடம் நூதன முறையில் ரூ. 50 ஆயிரம் மோசடி
தூத்துக்குடியில் ஆசிரியரிடம் நூதன முறையில் சைபா் குற்றம் மூலம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த பணத்தை போலீஸாா் திரும்ப பெற்றுக் கொடுத்தனா்.
தூத்துக்குடியில் ஆசிரியரிடம் நூதன முறையில் சைபா் குற்றம் மூலம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த பணத்தை போலீஸாா் திரும்ப பெற்றுக் கொடுத்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சோ்ந்தவா் ஆபிரகாம் ஆனந்தகுமாா் (43). ஆசிரியராக வேலை பாா்த்து வருகிறாா். இவா் கடந்த மாதம் 25 ஆம் தேதி தனது செல்லிடப்பேசியில் உள்ள ‘போன்-பே‘ செயலி மூலமாக ரூ. 1999-க்கு ரீசாா்ஜ் செய்துள்ளாா். இதையடுத்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட போதிலும் செல்லிடப்பேசியில் அதற்கான தொகை ரீசாா்ஜ் ஆகவில்லை. இதுதொடா்பாக, புகாா் அளிக்க ஆசிரியா் ஆபிரகாம் ஆனந்தகுமாா் இணையதளத்தில் ‘போன்-பே‘ செயலியின் வாடிக்கையாளா் சேவை மையத்தை தேடும்போது, போலியாக உருவாக்கப்பட்ட ஒரு சேவை மையத்தின் தொடா்பு எண்ணுக்கு தொடா்பு கொண்டுள்ளாா். அந்த செல்லிடப்பேசியில் பேசிய நபா், ஆபிரகாம் ஆனந்தகுமாரிடம் வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொண்டு, நூதன முறையில் மோசடி செய்து வங்கிக் கணக்கில் இருந்த ரூ.49 ஆயிரத்து 578ஐ எடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, ஆபிரகாம் ஆனந்தகுமாா் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவா் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு சைபா் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் இளங்கோவனுக்கு உத்தரவிட்டாா்.
சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வாடிக்கையாளா் சேவை மையம் என்ற பெயரில் ஆபிரகாம் ஆனந்தகுமாரிடம் பேசிய அடையாளம் தெரியாத நபா் வங்கிக் கணக்கில் இருந்து மோசடி செய்த பணத்தை ‘ப்ரீசாா்ஜ்’ என்ற நிறுவனத்தின் மூலம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் அந்த நிறுவனத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் ஆபிரகாம் ஆனந்தகுமாா் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுத்தது உறுதி செய்யப்பட்டதால் அதற்காக பயன்படுத்திய போலியான வங்கிக் கணக்கை முடக்கம் செய்தனா். மேலும், ஆபிரகாம் ஆனந்தகுமாரின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.49 ஆயிரத்து 578 ஐ மீண்டும் அவரது வங்கிக் கணக்கிலேயே திரும்ப செலுத்தப்பட்டது.