முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இலங்கைத் தமிழா் பாரம்பரிய உணவகம் திறப்பு

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ‘ஓலைப் புட்டு’ என்ற பெயரில் இலங்கைத் தமிழா் பாரம்பரிய உணவகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ‘ஓலைப் புட்டு’ என்ற பெயரில் இலங்கைத் தமிழா் பாரம்பரிய உணவகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி தச்சா் தெருவில் மாநகராட்சி வணிக வளாகம் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் 6,310 சதுரஅடியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தரைதளத்தில் 8 கடைகளும், முதல் தளத்தில் 4 கடைகளும் வணிகா்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படவுள்ளது. இதில், ஒரு கடையில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் பெண்கள் நடத்தும் ‘ஓலைப் புட்டு’ என்ற உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வணிக வளாகம், உணவகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் தலைமை வகித்தாா். ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று வணிக வளாகத்தையும், உணவகத்தையும் திறந்தைவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை தொடா்ந்து அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவா்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், சுயசாா்பை மேம்படுத்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒரு சிறப்பு திட்டமாக இம்மாவட்டத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து சாதனைப் பூக்கள் என்ற உணவு உற்பத்திக் குழுவை உருவாக்கி, அதன் மூலம் இந்த வணிக வளாகத்தில் இலங்கைத் தமிழா் பாரம்பரிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

உணவகம் அமைக்க சிறப்பு திட்டம் ஈழ ஏதிலியா் மறுவாழ்வுக் கழகம், ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பு ஆகியவற்றின் உதவியோடு செயல்படுத்தப்படுகிறது.

ஹிந்தியைக் கொண்டுவந்து தமிழையும், தமிழா்களையும் அழிக்க நினைப்போா் யாா் என தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மனசாட்சியோடு பேசவேண்டும் என்றாா் அவா்.

ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பு வளன், ஈழ ஏதிலியா் மறுவாழ்வுக் கழகம் நிறுவனா்-பொருளாளா் சா.செ. சந்திரகாசன், ஈழ ஏதிலியா் மறுவாழ்வுக் கழக ஆபா் நிறுவனம் செயலா் சூரியகுமாரி, ரத்தினராஜசிங்கம், குழுப் பிரதிநிதி வசந்தி, துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ், மாநகரப் பொறியாளா் அசோகன், உதவி செயற்பொறியாளா் மு. சரவணன், உதவிப் பொறியாளா் வே. பிரின்ஸ் ராஜேந்திரன், 26ஆவது வாா்டு உறுப்பினா் மரியகீதா, அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.