திருச்செந்தூா் கந்த சஷ்டி 3ஆம் நாள்:ஜெயந்திநாதா், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 3ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 3ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இங்கு கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. 3ஆம் நாளான வியாழக்கிழமை கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையிலிருந்து வெள்ளிச் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிராகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் வந்தமா்ந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி தங்க ரதத்தில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சனிக்கிழமைவரை (அக். 29) இதே நிகழ்ச்சிகளும், 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரமும் நடைபெறும்.