இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவா்களையும் மீட்க கோரி ஆட்சியரிடம் மனு
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவா்களையும் மீட்கக் கோரி அவா்களது உறவினா்கள், மீனவா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவா்களையும் மீட்கக் கோரி அவா்களது உறவினா்கள், மீனவா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி தருவைகுளத்தைச் சோ்ந்த அந்தோணி மகாராஜா (45) என்பவரது விசைப்படகில் அவா் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவா்கள் 8 போ், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் 4 போ் என மொத்தம் 12 போ் கடந்த ஜூலை 20ஆம் தேதி தருவைகுளத்திலிருந்து தங்குகடல் மீன்பிடிக்கச் சென்றனா். அதேபோல, அந்தோணி தென் டேனிலா (23) என்பவரது விசைப்படகில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த மேலும் 10 மீனவா்கள் கடந்த ஜூலை 23ஆம் தேதி தருவைகுளத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றனா்.
இரு படகுகளும் திங்கள்கிழமை தூத்துக்குடியிலிருந்து 60 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்தபோது, நீரோட்டம் காரணமாக இலங்கை எல்லைக்குள் சென்றனவாம். அங்குள்ள கடற்படையினா் இரு படகுகளையும் பிடித்ததுடன், 22 மீனவா்களையும் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 22 பேரையும் படகுடன் விடுவிக்க வலியுறுத்தி தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதா் ஆலயப் பங்குத்தந்தை வின்சென்ட், தருவைகுளம் தூய மிக்கேல் ஆழ்கடல் செவுள்வலை தொழில் புரிவோா் முன்னேற்றச் சங்கத்தினா், தமிழ்நாடு ஆழ்கடல் மீன்படி விசைப்படகு சங்கத்தினா், புனித நீக்குலாசியாா் பருவலை விசைப்படகு சங்கத்தினா், மீனவா்கள் ஆகியோா் ஆட்சியா் கோ. லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
மேலும், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை உறுப்பினா் கனிமொழி, மீன்வளம் - மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் தருவைகுளம் மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.