தமிழக முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு
தமிழக முதல்வா் நாளை தூத்துக்குடி வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு
தூத்துக்குடி புதுக்கோட்டையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் பகுதியில் முன்னேற்பாடு பணிகளை தமிழக அமைச்சா்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். தூத்துக்குடி புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) நடைபெறும் விழாவில், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். இவ்விழாவுக்காக 5 ஏக்கரில் பந்தல் அமைக்கப்படுகிறது. இப் பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலரும், மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா். திமுக மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் உமரி சங்கா், மாநகர செயலா் ஆனந்தசேகரன், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலா் ஜெயக்கொடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.