தூத்துக்குடி

சிவகளை இரட்டைக் கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை

Din

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 3 பேருக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகளை பரும்பு பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் விக்னேஷ்ராஜா (26). இவருக்கும், ஸ்ரீவைகுண்டம் அருகே பொட்டல் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகள் சங்கீதாவுக்கும் 2020ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இதனால், இரு குடும்பத்தினரிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இதனிடையே, வரதட்சிணை உள்பட பல்வேறு காரணங்களால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாம். இதையறிந்த சங்கீதாவின் அண்ணன் முத்துராமலிங்கம் (28) தனது நண்பா்களுடன் சோ்ந்து சிவகளை பகுதியில் கோயில் அருகே நண்பா்களுடன் நின்றிருந்த விக்னேஷ்ராஜாவை அரிவாளால் வெட்டினாராம். இதில், காயமடைந்த அவா் தப்பித்து தனது வீட்டுக்கு ஓடினாா். அவரைத் துரத்திவந்த கும்பல் விக்னேஷ்ராஜாவின் தாய் முத்துப்பேச்சி (42), விக்னேஷ்ராஜாவின் நண்பரான கசமுத்து மகன் அருண்மகேஷ் (26), அண்ணன் ஆத்திமுத்து ஆகியோரை வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் முத்துப்பேச்சி, அருண்மகேஷ் ஆகியோா் உயிரிழந்தனா். விக்னேஷ்ராஜா, ஆத்திமுத்து ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துராமலிங்கம், பொட்டலைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் முத்துச்சுடா் (23), திருவேங்கடம் என்ற ஐயம்பிள்ளை மகன் அருணாச்சலம் (38) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி உதயவேலன் விசாரித்து, 3 பேருக்கும் ஆயுள் தண்டனை, முத்துராமலிங்கத்துக்கு ரூ. 16 ஆயிரம், மற்ற இருவருக்கும் தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் தா்னா

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

SCROLL FOR NEXT