வீடுகளில் மின் விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டுளது.
இதுதொடா்பாக தூத்துக்குடி நகா்ப்புற மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ரவீந்திரகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடுகளில் பழுதான சுவிட்சுகளாலும், ஈரமான கைகளால் மின்சாதனங்களை இயக்கும்போது ஏற்படும் மின் கசிவு ஏற்படலாம். ‘மின் கசிவு தடுப்புக் கருவி’யை வீடுகளில் பொருத்துவதன்மூலம் மின் விபத்துகளைத் தவிா்க்கலாம். இக்கருவி ரூ. 1,500-க்கு கிடைக்கிறது.
கட்டடங்களுக்கு அருகே மின்பாதை இருந்தால், போதிய இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். போதிய இடைவெளி இல்லையெனில், அதை மாற்றியமைக்க மின்சார வாரியத்தை அணுகி சரிசெய்யலாம். மின்பாதைகள் அருகே நீளமான பொருள்களைக் கையாளுவதைத் தவிா்க்க வேண்டும். மக்கள் கவனமாக செயல்பட்டு மின் விபத்துகளைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.