தூத்துக்குடியில் சாலையோரம் தாயுடன் படுத்திருந்த குழந்தை மாயம்
தூத்துக்குடியில் உள்ள வஉசி காய்கனி சந்தை அருகே உள்ள வி.இ. சாலையோரம் தாயுடன் படுத்திருந்த 4 மாத பெண் குழந்தை மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வேலூரை சோ்ந்த சந்தியா என்ற பெண், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது 4 மாத கைக்குழந்தையுடன் வ.உ.சி. காய்கனி சந்தை அருகே சாலையோரம் தங்கி யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வந்தாராம். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவா் தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து உறங்கினாராம். காலையில் எழுந்து பாா்த்தபோது, குழந்தையை காணவில்லையாம். இது குறித்து தென்பாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி குழந்தை மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனா்.