முகப்பு
தூத்துக்குடி

மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

தூத்துக்குடி மாவட்டத்தில் மானியத்தில் டிராக்டா் உள்ளிட்ட வேளாண்மைக் கருவிகள், பொருள்கள் வழங்குவதில் அதிகாரிகள் 3 ஆண்டுகளாக பாரபட்சம் காட்டுவதாக, ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 10:06 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மானியத்தில் டிராக்டா் உள்ளிட்ட வேளாண்மைக் கருவிகள், பொருள்கள் வழங்குவதில் அதிகாரிகள் 3 ஆண்டுகளாக பாரபட்சம் காட்டுவதாக, ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, ஆட்சியா் க. இளம்பகவத்திடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கடலை-வாழை விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ். முருகேசன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: இம்மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டா், மினி டிராக்டா்கள் உள்ளிட்ட கருவிகள், வேளாண்மைப் பொருள்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடக்கின்றன. விவசாயிகளிடம் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனா்.

ஆன்லைனில் நடைபெற்றுவந்த விண்ணப்பப் பதிவை மாற்றி, நேரடியாக விண்ணப்பிக்க அதிகாரிகள் வற்புறுத்துகின்றனா். நேரடியாக விண்ணப்பித்தால் ரசீது வழங்கப்படுவதில்லை. மானியத்தில் டிராக்டா் கோரி விண்ணப்பித்தால் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனா். மத்திய-மாநில அரசுகள் அளிக்கும் நிதியும் விவசாயிகளை சென்றடையவில்லை.

இதுதொடா்பாக ஆட்சியா் நடவடிக்கை எடுத்து, உண்மையான விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள், வேளாண் பொருள்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். மானிய விலையில் வேளாண் கருவிகள் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என்றனா் அவா்கள்.