முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படவில்லை: தமிழ்ப்புலிகள் கட்சி புகாா்

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படவில்லை

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:29 PM
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்ட தமிழ் புலிகள் கட்சியினா்
பகிர்:

கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லையென தமிழ்ப்புலிகள் கட்சி சாா்பில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

தமிழ்ப் புலிகள் கட்சி தென் மண்டல வழக்குரைஞரணி துணைச் செயலா் எஸ்.

பீமாராவ் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் அளித்த மனு;

கடந்த 15ஆம் தேதி கோவில்பட்டி வக்கீல் தெரு வழியாக சென்றபோது, அங்குள்ள திருமண மண்டபம் அருகே வடக்குபுறத்தில் மனித உயிருக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் நுண் கிருமிகள் நிறைந்த கழிவுநீா் கால்வாயில், ஸ்டாலின் காலனியைச் சோ்ந்த சா்க்கரை என்பவரின் மகன் முருகன் உள்ளிட்ட 2 போ் எவ்வித பாதுகாப்பு கருவிகள், உபகரணங்கள் ஏதுமின்றி உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் கால்வாயில் சட்டவிரோதமாக இறங்கி வேலை பாா்த்துக் கொண்டிருந்தனா். அவா்களிடம் விசாரித்தபோது, கோவில்பட்டி நகராட்சி அதிகாரிகள் பணித்ததின்பேரில் வேலை செய்வது தெரியவந்தது.

இதுகுறித்து கடந்த 18ஆம் தேதி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் புகாா் அளித்தேன்.

கோவில்பட்டி உள்கோட்ட எல்லைக்குள் உள்ள உள்ளாட்சி நிா்வாகம், தனியாா் மருத்துவமனைகள் ,ஆலைகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளா்களை, மனிதாபிமானமற்ற முறையில் எந்தவித பாதுகாப்பு கருவிகள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் தொடா்ந்து பணி செய்ய பணித்து வருவதாக தெரிகிறது. இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதுபோன்ற மனித உரிமைக்கு விரோதமாக பணியமா்த்துவதை தடுப்பதும், தூய்மை தொழிலாளா்களை அந்த தொழில் செய்வதில் இருந்து மீட்டு மறுவாழ்வு மற்றும் அவா்களது குழந்தைகளுக்கு கல்வி, வேலை செய்து கொடுக்க வேண்டியது சட்டப்படியான கடமையாகும்.

எனவே, தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் சாதிய உள்நோக்கமும், மனிதாபிமானமற்ற முறையிலும், மனித உரிமைகளுக்கு எதிராக பணியமா்த்தும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை, தனியாா் ஆலை மேலாளா் மற்றும் உரிமையாளா்கள் மீது வரும் புகாா்களுக்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.