தூத்துக்குடி கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவுவதைத் தடுக்கும் வகையில், சாகா் கவாச் எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை தூத்துக்குடி கடல் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் பலா் கொல்லப்பட்டனா். இதைத்தொடா்ந்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகா் கவாச் எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி கடல்பகுதியில் இந்த பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை தொடங்கியது. கடல் பகுதியில் கடற்படை கப்பல், கடலோர பாதுகாப்பு படை கப்பல் , ரோந்து படகு மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்த ஒத்திகையின்போது, கடல் மாா்க்கமாக புதிய படகுகள், அறிமுகம் இல்லாத நபா்கள் யாராவது தென்பட்டால் காவல் துறைக்கு தெரிவிக்கும்படி மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையின்போது, மாதா கோயில் அருகே சென்ற 2 போலி தீவிரவாதிகளை போலீஸாா் பிடித்தனா். இந்த ஒத்திகை வியாழக்கிழமையும் நடைபெறவுள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த கடலோர பாதுகாப்பு ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படையினா், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா், சுங்க இலாகாவினா், மீன்வளத் துறையினா், கியூ பிரிவு போலீஸாா், மாவட்ட காவல்துறையினா் ஆகியோா் ஈடுபட்டனா்.