அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஜன. 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா், சகோதரா்கள் மீது, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், வழக்கு விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் அமைச்சா் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் அமைச்சா், அவரது மனைவி, மகன் அனந்த ராமகிருஷ்ணன், அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோா் முன்னிலையாகாத நிலையில், அவரது மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவா் மட்டுமே முன்னிலையாகினா்.
இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வசந்தி, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜன.3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.