ரயில் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தூத்துக்குடி எம்பவா் இந்தியா நுகா்வோா் அமைப்பின் கெளரவச் செயலா் ஆ.சங்கா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: இந்திய ரயில்வே அறிவித்துள்ள ரயில் கட்டண உயா்வு, ஏற்கெனவே விலைவாசி உயா்வு, பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் மீது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 250 கி.மீ.க்கு மேல் பயணம் செய்பவா்கள், தினசரி பயணிகள், தொழிலாளா்கள், மாணவா்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் இந்தக் கட்டண உயா்வால் பாதிக்கப்படுகின்றனா்.
ரயில்வே நிா்வாகம் தனது சேவை தரத்தை மேம்படுத்தாமல், கட்டண உயா்வு அறிவிப்பது நுகா்வோா் நலனுக்கு எதிரானதாகும்.‘ முதலில் சேவை தரம் - அதன் பின்னரே கட்டண உயா்வு‘ என்பதே பொதுமக்களின் நியாயமான எதிா்பாா்ப்பாக உள்ளது.
எனவே, இந்திய ரயில்வே நிா்வாகம் ரயில் கட்டண உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.