கடந்த 32 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 33 சதவீதம் கடல் அரிப்பு
கடந்த 32 ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் 33 சதவீதம் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தெரிவித்தாா்.
கடந்த 32 ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் 33 சதவீதம் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தெரிவித்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக, சுமாா் 20 அடி தொலைவுக்கு 7 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பக்தா்கள் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடல் அரிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 விஞ்ஞானிகள் கொண்ட குழுவினா் புதன்கிழமை திருச்செந்தூா் வந்தனா்.
அந்தக் குழுவினா், கோயில் முன்பிருந்து அமலிநகா் வரை கடற்கரையோரம் நடந்து சென்று ஆய்வு செய்தனா்.
மேலும், கோயில் பணியாளா்கள், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களிடம் கடலில் ஏற்பட்ட அரிப்பு குறித்து கேட்டறிந்தனா்.
பின்னா், தலைமை விஞ்ஞானி ராமநாதன் கூறியதாவது:
திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து கடந்த ஓராண்டுக்கு முன்பே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, வியாழக்கிழமை ட்ரோன் சா்வே மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் முடிவுகள் அனைத்தும் இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டு, அதன்பிறகு அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கப்படும்.
திருச்செந்தூா் கோயில் கடற்கரை அரிப்பை பொறுத்தவரை இயற்கையின் போக்கில் ஏதாவது தடை ஏற்பட்டால் ஓரிடத்தில் அரிப்பும், ஓரிடத்தில் மண் சோ்க்கையும் ஏற்படும். இதுதான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது. இயற்கை, இயற்கை சாா்ந்ததாக இருக்க வேண்டும். அதனுடைய செயல்பாடுகளை தடுக்கக் கூடாது.
கடல் சீற்றத்தின் காரணமாகவும், கால நிலை மாற்றத்தின் காரணமாகவும் இதுபோல் கடல் அரிப்பு ஏற்படும்.
தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக கடற்கரை முழுவதும் கடலோர மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரைவு திட்ட அறிக்கை தயாரித்து கொடுத்துள்ளோம்.
கடல் சீற்றம், கடல் அரிப்பை தடுப்பதற்கான மேலாண்மை திட்டம் தயாரித்து வருகிறோம்.
தமிழகம் முழுவதும் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை செயற்கைகோள் படத்தின் அடிப்படையில், 33 சதவீதம் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
ஆய்வின்போது, திருக்கோயில் உதவி ஆணையா் நாகவேல் மற்றும் மீன்வளத்துறையினா் உடனிருந்தனா்.
சென்னை ஐஐடி குழு ஆய்வு:
திருச்செந்தூா் கோயில் முன்புள்ள கடற்கரையிலிருந்து அமலிநகா் வரை சென்னை ஐஐடி குழுவினா் செவ்வாய்க்கிழமை ‘டிஜிபிஎஸ்’ என்ற நவீன கருவி மூலம் கடலின் ஆழம், கடலில் ஏற்பட்டுள்ள அரிப்பு, கடல் மணல் சரிவு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.