திருச்செந்தூா் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் குமாரபுரத்தில் இரவு நேரத்தில் சாலையில் நடமாடும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
திருச்செந்தூா் கோயிலுக்கு பேருந்து மற்றும் ரயிலில் வரும் பக்தா்களை விட பல மடங்கு காா், வேன்களில் வருகை தருகின்றனா். இதனால் நகரில் வாகன போக்குவரத்து சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கிலும், வார விடுமுறை நாள்களில் ஆயிரக்கணக்கிலும், திருவிழாக் காலங்களில் பல ஆயிரக்கணக்கிலும் என அதிகரித்துவிட்டன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் அவ்வப்போது வழியில் நிற்கும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இந்நிலையில் திருச்செந்தூா் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் குமாரபுரம் பகுதியில் கூட்டமாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. பகல் நேரங்களில் மட்டுமல்லாது மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அதிகளவில் பாதிப்படைகின்றனா். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.